ராஜபக்சர்களுக்கு சாவுமணி அடிக்க அணிதிரளுங்கள்!

0

அரிசி ஆலை உரிமையாளர்களும் – கம்பனிக்காரர்களுமே நாட்டை ஆளுகின்றனர். அரசாங்கம் செயலிழந்துப்போய்யுள்ளது, அரச தலைவரின் நிறைவேற்று அதிகாரமும் செயலற்றுப்போயுள்ளது, இப்படியான அரச தலைவரும், அமைச்சரவையும் நாட்டுக்குத் தேவையா? என கேள்வி எழுப்பியுள்ளார் மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகர்.

மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) அலுவலகத்தில் இன்று (12) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

“இன்று இந்நாட்டில் பெரும் வினாக்குறியாகவிருப்பது அரச தலைவரதும் அமைச்சரவையினதும் நலனா? அல்லது மக்களின் சீவனோபாய நலனா? என்பதாகவேயுள்ளது.

தற்போதைய அரசாங்கம் நாட்டு மக்களுக்கு அளித்திருந்த வாக்குறுதிகளை முற்றுமுழுதாக கைவிட்டிருக்கிறது.

இறுதியாக நடைபெற்ற தேர்தலின் போது 69 இலட்சம் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த ராஜபக்ச அரசாங்கம் இந்நாட்டின் வளங்களை அமெரிக்கா, சீனா, இந்தியா போன்ற நாடுகளுக்குத் தாரைவார்த்து வருகின்றது.

இந்த நிலையில் இந்த அரசாங்கத்தை இந்த நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து உடன் வீட்டுக்கு அனுப்பாவிட்டால் எம்மீதும், நம்முடைய பிள்ளைகள் மீதும் நாமே மண்ணை அள்ளிப் போட்டு அழிப்போராக ஆகிவிடலாம்.

எனவே தான் இலங்கையில் 73 வருட ஆட்சி அதிகாரத்திற்கு நிரந்தரமாகச சாவுமணி அடிக்க மக்கள் விடுதலை முன்னணியிடம் ஆட்சியை ஒப்படைப்பதே சரியான மார்க்கமாக இருக்க முடியும்” என்றார்.