‘எரிவாயு விலையேற்றம்’ சாதாரண மக்களுக்கு பெரும் நெருக்கடி!

- விலை குறைப்பை செய்யுமாறு எஸ்.ஆனந்தகுமார் அரசிடம் வேண்டுகோள் -

0

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையேற்றம் மற்றும் எரிவாயுவின் இரட்டிப்பாக அதிகரித்துள்ளமையின் காரணமாக குறைந்த வருமானம் கொண்ட தோட்டத் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் பாரிய பொருளாதார நெருக்கடிகளுக்கும் முகம்கொடுத்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை சாதாரண மக்களால் தாங்கிக்கொள்ள முடியாதவகையில் அதிகரித்துள்ளது. அன்றாட வருமானத்தை நம்பியுள்ள பெருந்தோட்ட மக்களுக்கு இது பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது. தோட்டங்களில் ஒருபுறம் சம்பள குறைப்பையும் வேலை நாட்கள் குறைப்பையும் கம்பெனிகள் மேற்கொண்டுவரும் சூழல் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை கட்டுப்பாடற்ற விதத்தில் அதிகரித்து வருகிறது.

தற்போது எரிவாயுவின் விலையையும் இரட்டிப்பாக அரசாங்கம் அதிகரித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பு வருமானம் குறைந்த மக்களை நிலைகுலைய செய்துள்ளது. எரிவாயு விலையை இரட்டிப்பாக அதிகரித்துவிட்ட 75 ரூபாவை குறைத்து அரசாங்கம் நாடகம் நாடுகிறது. இந்த அரசாங்கம் மக்களின் அரசாங்கமா அல்லது முதலாளிகளின் அரசாங்கமா என தெரியவில்லை. பொருட்களின் விலையை அரசாங்கம்தான் நிர்ணயிக்க வேண்டும். ஆனால் எமது நாட்டில் முதலாளிகள்தான் விலைகளை நிர்ணயிக்கின்றன.

இதன் காரணமாக உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இத்தகைய திடீர் விலையேற்றம் காரணமாக குறைந்த வருமானத்தைப் பெறுகின்ற நாட்டு மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக தோட்டத் தொழிலாளர்கள் கடந்த பல மாதங்களாக குறைந்த சம்பளத்தேயை பெற்று வருகின்றனர்.

நாட்டின் பொருளாதார கட்டமைப்பைச் சீர்செய்ய முடியாத அரசாங்கம் எதற்கு? அமைச்சர்களை மக்களின் பிரச்சினைகள், தேவைகளை கண்டுகொள்ளாது தீர்மானங்கள் எடுக்கின்றனர். உடனடியாக எரிவாயுவின் விலையை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தோடு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையேற்றத்தையும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.