தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் இன்று!

0

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இரு கட்டங்களாக நடைபெற உள்ளது.

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் முதல் கட்ட வாக்குப்பதிவு 7,921 வாக்குச்சாவடிகளில் இன்று நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தலில் 41 லட்சத்து 93 ஆயிரத்து 996 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் உற்சாகமாக வாக்களித்து வருகின்றனர். வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறும். மாலை 5 மணி முதல் 6 மணி வரை ஒருமணி நேரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களும், அதற்கான அறிகுறி உள்ளவர்களும் வாக்களிக்க பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வாக்குப்பதிவை கண்காணிக்க கோயம்பேட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் இணையதள வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.