ஊடக சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் ; சஜித் கண்டனம்!

0

ஊடக சுதந்திரத்திற்கு எதிரான அச்சுறுத்தலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கண்டனம் வெளியிட்டுள்ளார்.

கடந்த நாட்களில் சதொச நிறுவனத்தில் ஏற்பட்ட மோசடி சம்பவங்களை மேற்கோள் காட்டி லங்காதீப மற்றும் திவயின பத்திரிகைகள் பல்வேறு செய்திகளை பதிவிட்டிருந்தன.

இந்த செய்திகளின் உண்மைத்தன்மை தொடர்பில் ஆராய்வதற்காக ஆசிரியர் ஊடக நிறுவனத்தின் ஊழியர்களுக்கு குற்றப் புலனாய்வு பிரிவு அழைப்பு விடுத்தது.

இந்நிலையில் அரசியலமைப்பின் பிரிவு 14 (1) பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை தெளிவாகக் காட்டுவதை சுட்டிக்காட்டிய சஜித் பிரேமதாச, ஜனநாயகத்தை மதிக்கும் ஒரு சமூகத்தில் ஊடகங்கள் மீதான இத்தகைய மிரட்டல் ஏற்றுக்கொள்ள முடியாதது என கூறினார்.

நாட்டில் ஊழல் மற்றும் மோசடிகளை அம்பலப்படுத்துவது ஊடகங்களின் பொறுப்பாகும், தங்கள் பொறுப்புகளைச் செய்யும் பத்திரிகையாளர்களை சி.ஐ.டி. விசாரணைக்கு அழைக்கவோ மிரட்டவோ யாருக்கும் உரிமை இல்லை என்று குறிப்பிட்டார்.