ஊடகவியலாளர்களை குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைப்பு ;  டலஸ் கண்டனம்!

0

வெள்ளைப்பூடு சம்பவம் தொடர்பான பத்திரிக்கை செய்தி குறித்து ஊடகவியலாளர்கள் சிலர் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டமைக்கு வருத்தம் தெரிவிப்பதாக வெகுஜன ஊடக அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

இதனை அரசாங்கம் என்ற ரீதியில் நிராகரிப்பதாக தெரிவித்த அமைச்சர் ,இவ்வாறான சம்பவம் இடம்பெறக்கூடாத ஒன்று என்பதை மிக பொறுப்புடன் தெரிவிப்பதாகவும் கூறினார்.

இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் உடனடியாக செயல்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஊடகவியலாளர்களை குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைப்பதை நிறுத்துமாறு சம்பந்தப்பட்டஅதிகாரிகளை அறிவுறுத்தியதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பு இன்று (28) காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன் போது வெள்ளைப்பூடு சம்பவம் தொடர்பாக சில ஊடகவியலாளர்கள் குற்றப்புலனாய்வு பரிவுக்கு அமைக்கப்பட்டமை குறித்து ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டதுடன் .பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர ஊடகவியலாளர்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்ப்படமாட்டார்கள் என்று உறுதிதெரிவித்திருப்பதாகவும் கூறினார்.

நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை அதிகாரி ஒருவர் ,வெள்ளைப்பூடு சம்பவம் குறித்து தெரிவித்திருந்த கூற்று தொடர்பில் அமைச்சர் பந்துல குணவர்தன குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடொன்றை செய்திருந்ததாகவும் வெகுஜன ஊடக அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.