அரிசியை அதிக விலையில் விற்பனை செய்தால் ஒரு இலட்சம் தண்டப்பணம்!

0

எதிர்வரும் போகத்திலிருந்து நெல் மற்றும் அரிசியின் விலையை அரசாங்கமே தீர்மானிக்கும். அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்தால் ஒரு இலட்சம் ரூபா தண்டப்பணம் அறவிடப்படும் என்பதுடன் சட்ட நடவடிக்கையும் அரிசி ஆளை உரிமையாளர்களுக்கு எதிராக எடுக்கப்படுமென விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்கிழமை எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் பதிலளிக்கையில்,

எதிர்வரும் இரண்டு வாரங்களில் அரிசி ஆளை உரிமையாளர்களுடன் அரசாங்கம் உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடவுள்ளது. வர்த்தக அமைச்சும் விவசாய அமைச்சும் கூட்டாக இதுகுறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகிறோம்.

எதிர்வரும் போகத்தில் 50,52 ரூபாய்க்கே நெல்லை கொள்வனவு செய்யவுள்ளோம். அனைத்து அரிசி ஆளை உரிமையாளர்களும் இதற்கான உடனொடிக்கையில் கைச்சாத்திடவுள்ளனர்.

இதன் பின்னர் அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்ய முடியாது. 2500 ரூபாவாக இருந்த தண்டப்பணத்தை ஒரு இலட்சம் ரூபாவாக அதிகரித்துள்ளோம். ஆகவே, அதிக விலைக்கு நெல்லை எவரும் வாங்கினாலும் அரிசியை அதிகவிலைக்கு விற்பனை செய்ய முடியாது.

அரிசி விலை குறித்து நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையுடனும் ஓர் உடன்படிக்கைக்கு வந்துள்ளோம். எதிர்வரும் போகத்தில் பெறப்படும் அரிசியை அவரும் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமாக விற்பனை செய்ய முடியாது.

நாடு ஒரு கிலோ 120 , சம்பா ஒரு கிலோ 150 , கீறி சம்பாபவை 225 ரூபாவுக்கும் விற்பனை செய்கின்றனர். இவை அனைத்துக்கும் காரணம் அதிக விலைக்கு விற்பனை செய்பவர்களுக்கு வெறும் 2500 ரூபா தண்டப்பணத்தை அறவிடுவதாகும். குறித்த தண்டப்பணத்தை ஆளை உரிமையார்கள் இலகுவாக செலுத்துகின்றனர்.

ஆகவே, இதன் பின்னர் அரிசி மற்றும் நெல் விலையை அரசாங்கம் தான் தீர்மானிக்கும். தனி நபர்களால் இதனை தீர்மானிக்க முடியாதென தெளிவாக கூறிவிட்டோம். அதேபோன்று விவசாயிகளிடம் நிர்ணயிக்கப்பட்ட விலையில் நெல்லையும் கொள்வனவு செய்வோம் என்றார்.