வெள்ளத்தில் மூழ்கிய மும்பை!

0

மராட்டிய மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் மிக பலத்த மழை பெய்தது.

நேற்று இரவும் இடைவிடாமல் நீண்ட நேரம் அடைமழை பெய்தது.

தொடர் மழை காரணமாக மும்பை நகரின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியபடி உள்ளது. பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

நேற்று இரவு 12 மணி முதல் 2 மணி வரை பெய்த அடை மழை காரணமாக சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கி நிற்கிறது. பெரும்பாலான இடங்களில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

சாலைகளும், ரெயில் தண்டவாளங்களும் மழை தண்ணீரில் மூழ்கி இருப்பதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சியான், தாதர், காந்தி மார்க்கெட், செம்பூர், குர்லா, எல்.பி.எஸ்.ரோடு, சன்பத்தி உள்ளிட்ட பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு அதிகமாக காணப்படுகிறது.

கடந்த 2005-ம் ஆண்டு ஜூலை மாதம் மும்பையில் 944 மில்லி மீட்டர் மழை பெய்து அந்த நகரையே மூழ்கடித்து இருந்தது. நேற்று இரவு பெய்த மழையும் அதை நினைவுபடுத்தும் வகையில் மிக உக்கிரமாக இருந்தது. விடிய விடிய பெய்த மழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான பகுதிகளில் வாகனங்கள் இயக்கப்படவில்லை. பஸ்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. சில இடங்களில் இருசக்கர வாகனங்களும், கார்களும் வெள்ளத்தில் மிதந்தபடி நிற்கின்றன.

தொடர்மழையால் ரெயில் நிலையங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் மும்பை மின்சார ரெயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மும்பையில் இருந்து புறநகருக்கு இயக்கப்படும் அனைத்து ரெயில்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

வெளியூர்களில் இருந்து வரும் ரெயில்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

மும்பையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக 22 பேர் பலியாகி உள்ளனர். நவிமும்பை பகுதிகளில் நிலச்சரிவு காரணமாக வாசிநகா என்ற இடத்தில் வீடு ஒன்று இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலியானார்கள். இன்று அதிகாலை 6.30 மணிக்கு அந்த வீட்டின் சுவர் மீது நிலச்சரிவு விழுந்ததால் அனைவரும் வீட்டுக்குள் சிக்கிக் கொண்டனர்.

செம்பூர் பகுதியில் வீடுகள் இடிந்ததில் 11 பேர் உயிரிழந்தனர். மற்ற பகுதிகளில் மழை தண்ணீரில் சிக்கிய 4 பேர் உயிரிழந்துள்ளனர். நிலச்சரிவுகளில் மேலும் பலர் சிக்கி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. பேரிடர் மீட்பு குழு மூலம் நிவாரணப்பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. மழை தண்ணீர் அதிகம் உள்ள பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மும்பையில் மழையால் வீடுகள் இடிந்து பலியானவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே மும்பையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி 204 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இன்று மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ரெயில் போக்குவரத்து முழுமையாக முடங்கி உள்ளது. மும்பையில் தினமும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்ளூர் ரெயில் சேவைகள் மூலம் சுமார் 75 லட்சம் பேர் பயணம் செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.