நாட்டின் தலைவர் யார்? வேலுக்குமார் கேள்வி!

0

நாட்டின் தலைவர் யார்? என்று மக்கள் கேள்வி எழுப்பும் நிலையிலேயே நாடு இருக்கின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் வேலுக்குமார் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபன அபிவிருத்தி திருத்தச் சட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் தலைவர் யார்?என்ற கேள்விகள் மக்கள் மத்தியில் இருக்கின்றன. ஒரு தரப்பினர் கோத்தாபய ராஜபக்‌ஷவே தலைவர் என்று கூறும் போது இன்னுமொரு தரப்பினர் மகிந்த ராஜபக்‌ஷ என்று கூறுகின்றனர். இவ்வேளையில் மற்றுமொரு தரப்போ இல்லை பஸில் ராஜபக்‌ஷதான் தலைவர் என்று கூறுகின்றனர். இவ்வாறு நாட்டின் தலைவர் யார் என்று தேடும் நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது.

ஒரே நாடு ஒரே சட்டம் என்று கூறிக்கொண்டு வந்தார்கள். ஆனால் இப்போது நாட்டில் சட்டம் இல்லை. அரசாங்கம் உள்ளதா என்றும் தெரியவில்லை. மாபியாக்கள் ஆட்சி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. சீனாவிடமே நாட்டின் ரிமோட் உள்ளது. நாட்டின் வியாபரங்கள் சீனாவிடம் உள்ளது. இந்த வியாபாரமும், சீன அரசாங்கமும் மற்றும் மாபியாக்களும் இணைந்தே நாட்டை ஆட்சி செய்கின்றது. இராசய உரம் தடை செய்யப்பட்டமைக்கு பின்னர் சீனாவே உள்ளது.

இதேவேளை மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்கத்தில் உள்ளவர்கள் எங்கே போனார்கள் என்றும் தெரியவில்லை. அவர்கள் கட்டப்பஞ்சாயத்து செய்து வந்தால் வெட்டுங்கள் என்று கூறும் கீழ்த்தரமான வழிநடத்தலை செய்கின்றனர்.

இப்போது தோட்ட நிர்வாகங்கள் தொழிலாளர்களின் உரிமைகளை மீறும் நிலைமையை காணக்கூடியதாக உள்ளது. இந்தவிடயத்தில் தலையிட வேண்டியவர்கள் எங்கே இருக்கின்றார்கள் என்று தெரியாது போயுள்ளது என்றார்.