சீனாவுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை ஏன் இந்தியாவுக்கு கொடுக்கவில்லை!

0

சீனாவுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை ஏன் இந்தியாவுக்கு கொடுக்க சமகால அரசாங்கம் மறுகிறதென தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.ஸ்ரீதரன் கேள்வி எழுப்பினார்.

கொழும்பு போர்ட் சிட்டிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை தமிழர்களுக்கு உரிமையை வழங்குவதில் கொடுத்திருந்தால் வடக்கு,கிழக்கும் உங்களுக்கு கடன் வழங்கியிருக்குமெனவும் அவர் கூறினார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இரண்டாவது நாளாக நடைபெற்ற கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழுச் சட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

கொழும்பு போர்ட் சிட்டி விவகாரத்தை பின்கதவு இராஜதந்திரமாகவே நாம் பார்க்கின்றோம். ஒரு காலத்தில் காலணி த்துவம் இந்த நாட்டை, இன்னும் பல நாடுகளை தனது கைக்குள் வைத்திருந்தது. அதனைத்தொடர்ந்து 19,20 ஆம் நூற்றாண்டுகளில் நவ காலணித்துவம் கோலோச்சியிருந்தது. இப்போது கடன் காலணி த்துவம் உலகத்தை தனது கைக்குள் கொண்டு வருகின்றது. சீனாவின் இந்த கடன் காலணித்துவம் என்பது இலங்கையின் மேட்டு நிலமான சில பகுதிகளை பள்ளமாக்கி ஆழ் கடலில் ஒரு மண்மேட்டை உருவாக்கி 269 ஹெக்டேயரில் இந்த செயற்கை தீவு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த தீவில் உருவாக்கப்பட்டுள்ள வர்த்தக மையத்தில் இலங்கையில் இருக்கின்ற நாணயத்தைத்தான் பயன்படுத்துவார்களா அல்லது சீனாவின் நாணயமா அல்லது அமெரிக்கா டொலரா அங்கு பயன்படுத்தப்படும் என்பது தொடர்பில் இதுவரை யாரும் இங்கு சரியான விளக்கம் அளிக்கவில்லை. உருவாக்கப்படும் இந்த சீனாவின் தனிநாட்டுக்குள் என்ன நாணயம் பயன்படுத்தப்படப்போகின்றது?அதே நேரம் அங்கே இருக்கப்போகின்ற பொலிஸ் இலங்கை பொலிஸா அல்லது சீனப்பொலிஸா ஆட்சி நடத்தப்போகின்றது என்பதையும் இங்கு தெளிவு படுத்த வேண்டும்.

ஏனெனில் நீண்ட நெடுங்காலமாக இந்த மண்ணிலே தமிழர்கள் தங்களுடைய இழந்து போன இறைமைக்காக போராடி வருகின்றனர்.உங்களுடன் இந்த நாட்டில் வாழ்கின்ற சொந்த சகோதரர்களோடு அவர்களின் இறைமையை பகிர்ந்து ஒற்று மையாக இந்த நாட்டைக் கட்டி எழுப்புகின்ற எந்த எத்தனமும் இல்லாத சிங்களத் தலைவர்கள் இன்னுமொரு நாட்டுக்கு இந்த மண்ணினுடையை ஒரு பகுதியை விற்கின்றார்கள் அல்லது அதனை விட்டுக்கொடுக்கின்றார்கள். இது எவ்வளவு தூரம் அவலமானது, ஆபத்தானது என்பதனை சிங்கள மக்கள் புரிந்து கொள்வதற்கான காலமாக இது மாறப்போகின்றது.

பலாலி விமானத்தளத்தை இந்தியா உருவாக்கி அந்த விமானத்தளத்திற்கான வேலைகளைஆரம்பிக்கின்ற போது இந்த அரசு அதனை தடுத்திருந்தது. தலைமன்னாருக்கும் தூத்துக்குடிக்குமான கப்பல் சேவையை இந்த அரசு தடுத்தது. இந்த விடயங்களை தடுத்து சீனாவுக்கான ஒரு முன்னுரிமையை மட்டும் வழங்குவதில் மட்டும் ஏன் கரிசனை கொண்டுள்ளீர்கள்?

இன்று புலம்பெயர் நாடுகளிலே 13 இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் இருக்கின்றார்கள். எத்தனையோ தொழிலதிபர்கள் இருக்கின்றார்கள். இவர்கள் இந்த மண்ணிலே முதலீடு செய்வதற்கு தயாராக இருக்கின்றார்கள். குறிப்பாக அவர்கள் வடக்கிலும் கிழக்கிலும் இருக்கின்ற தொழிற்சாலைகளைக் கூட இயக்குவதற்கான திராணியோடும் தைரியத்தோடும் உள்ளனர். ஆனால் அவர்கள் இந்த மண்ணிலே வந்து தங்களுடைய முதலீடுகளை செய்ய முடியாமல் அரசினால் தடுக்கப்படுகின்றார்கள். அதற்கான சுதந்திரம் இல்லை. அவ்வாறு ஒருவர் முதலீடு செய்ய முனைகின்றபோது அரசின் மத்திய வங்கி என்பதும் அரசின் சட்ட திட்டங்களும் பொருளாதார ஆணைக்குழுவும் அந்த செயற்பாடுகளை முற்று முழுதாக தடுக்கின்றன.

இலங்கையின் வடக்கு, கிழக்கிலே தமிழர் வாழ்கின்ற பிரதேசங்களில் 2 இலட்சத்துக்கும் மேற்பட்ட படைகளைக் குவித்து தமிழர் துளியளவும் பொருளாதாரத்தில் முன்னேறிவிடக்கூடாது என்பதன் அடிப்படையில்தான் இந்த அரசு தனது வேலைத்திட்டங்களை முழுமையாக முன்னெடுக்கின்றது. இவ்வாறான இலங்கையரசு தன்னுடைய சொந்த மக்களுக்கான படுகுழியை தோண்டுகின்ற செயற்பாடுதான் இந்த கொழும்பு போர்ட் சிட்டி .இதனை சிங்கள மக்கள் இன்னும் சரியாக புரிந்து கொள்ளவில்லை.காலம் மெல்ல மெல்ல அவர்களிடம் அந்த சந்தர்ப்பத்தைக்கொடுக்கின்றது. இன்னும் குறிப்பிட்ட காலத்திற்குள் அவர்கள் உண்மையை புரிந்து கொள்வார்கள்.

குறிப்பாக வடக்கு கிழக்கிலே ஆனையிறவு குறிஞ்சாத்தீவு உப்பளத்திலிருந்து காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை,வாழைச்சேனை காகித தொழிற்சாலை இவற்றையெல்லாம் இயக்குவதற்கு இந்த அரசு இதுவரை எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இவற்றை மீண்டும் இயக்க புலம்பெயர் தமிழர்கள் முன்வந்தார்கள். ஆனால் அரசு எந்த ஒத்துழைப்பையும் வழங்கவில்லை. புலம்பெயர் நாடுகளில் உ ள்ள தமிழர்கள் வடக்கு,கிழக்கில் அழிந்து போன பொருளாதாரத்தை கட்டியெழுப்ப ,அவர்களின் முதலீடுகளை மேற்கொள்ள நீங்கள் அனுமதியுங்கள். ஒரு சமஸ்டி அடிப்படையில் இணைந்து வாழுகின்ற ஒற்றுமை உங்களுக்கு இருந்தால் வடக்கு,கிழக்கிலிருந்து உங்களுக்கு கடன் தரக்கூடிய எத்தனையோ தொழில் துறைகளை உருவாக்க முடியும்.

அதனை விடுத்து இந்த நாட்டின் இறைமையை விற்று சீனா மூலம் 7 ஆவது தீவை நீங்கள் உருவாக்கியுள்ளீர்கள். ஏறாவூர் மட்டக்களப்பிலிருந்து கூட இந்த கடலை மூடுவதற்கான மண் வந்துள்ளது . வடக்கு,கிழக்கிலுள்ள மண்ணும் இந்தக்கடலில் கொட்டப்பட்டுள்ளது. இலங்கையினுடைய எத்தனையோ மலைகள் குடையப்பட்டு கற்கள் இந்தக்கடலில் கொட்டப்பட்டுள்ளன. இலங்கையினுடைய பகுதிகள், தரைத் தோற்றங்கள் பள்ளமாக்கப்பட்டு கடல் உயரமாக்கப்பட்டுள்ளது. இதன் இலங்கையின் 65610 சதுர கிலோமீற்றரில் இன்னுமொரு 269 ஹெக்டேயர் நில ம் கூட்டி சொல்லப்பட்டாலும் கூட இந்த நாட்டுக்கான யதார்த்தமாக இது அமையப்போவதில்லை. இந்த நாட்டினுடையை அழிவுப்பாதையிலே முதல் காலடியை வைத்துள்ளீர்கள். இந்த நாடு கடன் காலணித்துவத்திற்குள், பின்கதவு இராஜதந்திரத்துக்குள் மூழ்கிப்போகின்றது .இந்த பின்கதவு இராஜதந்திரம் தான் இந்த நாட்டில் நீதி,ஜனநாயகம் இல்லாமல் இந்த நாட்டை மூழ்கடிக்கும் வேலையை செய்துள்ளது.

போர்ட் சிட்டிக்கு கொடுக்கின்ற முக்கியத்துவத்தை முதலில் இந்த நாட்டில் புரையோடிப்போயுள்ள ,உங்களோடு வாழ்ந்த .இறைமையோடு வாழ்ந்த தேசிய இனமான தமிழினத்தின் அடையாளங்களையும் அவர்கள் தங்களின் மண்ணில் வாழ்வதற் வழங்கினால் நீங்கள் யாரிடமும் கடன்படத்தேவையில்லை. யாருக்கு கீழேயும் நீங்கள் கை கட்டி இருக்கத் தேவையில்ல.நீங்களும் நாங்களும் இணைந்து இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியும். எனவே எமக் குரிய உரித்தை,உரிமையை வழங்குங்கள். அது வே இந்த நாட்டின் மாற்றத்துக்கான காரணமாகும் என்றார்.