கொரோனா – தோட்ட தொழிலாளர்கள் கட்டாயம் உரிய சுகாதார வழிக்காட்டல்களை கடைப்பிடிக்க வேண்டும் – பாரத் அருள்சாமி

(செய்தி - க.கிஷாந்தன்)

0

நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களில் உள்ள பெருந்தோட்ட பகுதிகளில் கொவிட் 19 தொற்று அதிகரிக்கலாம் என சுகாதார அதிகாரிகள் எதிர்வு கூறியுள்ள நிலையில் எதிர்வரும் திங்கட் கிழமை முதல் மேலும் பல கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக கொவிட் 19 பாதுகாப்பு செயலணியின் பிரதானி பிரஜாசக்தி நிறுவனத்தின் பணிப்பாளர் பாரத் அருள்சாமி தெரிவித்துள்ளார்.


ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
கொவிட் பரவல் நாளாந்தம் அதிகரிக்கும் நிலையில் மலையக பகுதிகளில் உள்ள தோட்ட தொழிலாளர்கள் கட்டாயம் உரிய சுகாதார வழிக்காட்டல்களை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுள்ளார்.


சுகாதார அமைச்சின் ஆலோசனைகளுக்கு அமைய செயற்பட வேண்டியது பெருந்தோட்ட மக்களின் கட்டாய கடமை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


மாறாக சுகாதார வழிக்காட்டல்களை பின்பற்ற தவறினால் நுவரெலியா, கண்டி ஆகிய மாவட்டங்கள் பாரிய அச்சுறுத்தலை சந்திக்க நேரிடும் எனவும் அவர் கூறியுள்ளார்.


ஆகவே, மலையக மக்கள் சுகாதார பணியாளர்களின் சேவைகளை உதாசீனப்படுத்தாமல் கைகளை கழுவி, முகக் கவசம் அணிந்து மற்றும் சமூக இடைவெளியை பேணி தொழில் நடவடிக்கைகளில் ஈடுப்பட வேண்டும் என அவர் கேட்டுள்ளார்.


கொவிட் தடுப்பூசிகளை வழங்கும் சந்தர்பத்தில் பிரஜாசக்தி நிறுவனம் முன்னின்று செயற்படும் எனவும் முக்கியமாக எதிர்வரும் திங்கட் கிழமை முதல் அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் வழிகாட்டலில் கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கைகளை சுகாதார பிரிவ மற்றும் பாதுகாப்பு படையுடன் இணைந்து மிக துரிதமாக முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பெருந்தோட்ட மக்கள் நகர்புறங்களுக்கு வருவதை தடுப்பது குறித்து பெருந்தோட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடி வருவதாகவும் அதற்கு சாதகமான பதில் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.


அதாவது அத்தியாவசிய பொருட்களை பெருந்தோட்ட பகுதிகளுக்கே கொண்டு சென்று வழங்குவது குறித்த திட்டம் எனவும் பிரஜாசக்தி நிறுவனத்தின் பணிப்பாளர் பாரத் அருள்சாமி மேலும் தெரிவித்துள்ளார்.


ஆகவே சகல கட்சி இன மத பேதங்களையும் மறந்து இலங்கையர்களாக இணைந்து கொவிட் பெருந்தொற்றை இல்லாதொழிக்க ஒத்துழைப்பு வழங்க நாம் அனைவரும் ஒன்றிணைவோம் எனவும் பாரத் அருள்சாமி தெரிவித்துள்ளார்.