மலையக பாடசாலைகள் எதிர்கொண்டிருக்கும் காணிப் பிரச்சினை!

0

மலையக பெருந்தோட்ட பாடசாலைகள் இன்றும் பல்வேறு இடர்களுக்கு முகங்கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றன. அரசாங்கங்கள் மாறினாலும் பெருந்தோட்ட பாடசாலைகளின் அடிப்படை பிரச்சினைகள் பலவும் தீர்க்கப்பட்டதாக இல்லை.

பாடசாலை ஒன்றுக்கு 2 ஏக்கர் வீதம் வழங்கப்பட வேண்டும் என்ற அரசாங்கத்தின் வர்த்தமானி அறிவித்தலுக்கமைய பெருந்தோட்ட கம்பனிகளும் இன்று செயற்படுகின்றனவா? அவ்வாறு செயற்படாத கம்பனிகளுக்கெதிராக அரச அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கின்றனரா? என்றும் பலரும் விமர்சிக்காமலில்லை.

கடந்த நல்லாட்சிக் காலத்தில் கல்வி இராஜாங்க அமைச்சராக இருந்த இராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரமும் கிடைத்தது. அதன்படி முதற்கட்டமாக 350 பெருந்தோட்ட பாடசாலைக்கு தலா 2 ஏக்கர் வீதம் காணி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. அதன் மூலம் பல பாடசாலைகள் பயனடைந்தமையும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் மலையகத்தில் மேலும் பல பாடசாலைகளுக்கு காணி தொடர்பான பிரச்சினை இன்று வரை தொடர்ந்த வண்ணமே உள்ளது.

அந்த வரிசையில் நுவரெலியா கல்வி வலய கோட்டம் 2 இலுள்ள தலவாக்கலை பாரதி மகா வித்தியாலய மும் கடந்த சில வருட காலமாக காணிப் பிரச்சினையை எதிர்நோககி வருகின்றது. 91 வருட வரலாற்றைக் கொண்ட இப்பாடசாலை பல அடிப்படை பிரச்சினைகளுக்கு முகங் கொடுத்து வருகின்றது.

அவற்றுள் காணி பிரச்சினை பிரதானமானது. இப்பாடசாலையில் 800 மாணவர்களும் 41 ஆசிரியர்களும் கற்றல் சுற்பித்தலில் ஈடுபட்டு வருவதோடு இது ஒரு 1 C வகையைச் சேர்ந்த கலவன் பாடசாலை ஆகும். 1930 இலிருந்து 1994 வரை 1 /2 ஏக்கர் காணியில் தலவாக்கலை தமிழ் வித்தியாலயம் என்ற பெயரில் பழைய கட்டிடத்தில் இயங்கி வந்த இப்பாடசாலை பின்னர் 1994 முதல் தரமுயர்த்தப்பட்டு பாரதி மகா வித்தியாலயம் என்ற பெயருடன் இன்றுவரை புதிய இடத்தில் இயங்கி வருகிறது.

சீடா செயற்றிட்டத்தின் கீழ் இப்பாடசாலைக்கு 4 கட்டடங்களை 1994 இல் நிர்மாணித்து பாடசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டது. அதன் பின்னர் 2016 வரை பாடசாலைக்கென கட்டடங்கள் எதுவும் நிர்மாணிக்கப்படவில்லை. கடந்த நல்லாட்சி காலத்தில் ‘அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை’ செயற்றிட்டத்தின் கீழ் 2016 இல் 35 மில்லியன் நிதி தலவாக்கலை பாரதி மகா வித்தியாலயத்திற்கு ஒதுக்கப்பட்டது.

அதற்கமைய 8 வகுப்பறைகளைக் கொண்ட 2 மாடி வகுப்பறை கட்டிடமும் (90′ x 25′) தொழிநுட்ப கட்டிடத் தொகுதிக்குமாக ஒதுக்கப்பட்ட நிதியில் நிர்மாணப் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டன. அதற்கமைய வகுப்பறை கட்டிடமானது 2018 இல் முழுமையாக நிறைவு செய்து பாடசாலை நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

இருப்பினும் பாடசாலையில் நிலவிய காணிப் பிரச்சினை தொழிநுட்ப கட்டிட நிர்மாணப் பணியானது இன்றுவரை முழுமை பெறாத நிலையிலேயே உள்ளது. குறித்த கட்டட நிர்மாணிப் பணிக்காத தேவையான காணி வசதி பாடசாலையில் இல்லாமையின் காரணமாக தலவாக்கலை தோட்ட நிர்வாகத்துடன் பாடசாலை நிர்வாகம் பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியது. இருப்பினும் இறுதியில் ஒரு சிறிய காணித்துண்டு (10 அடி நீளமான) மாத்திரமே நிர்வாக்கினால் பாடசாலைக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டது.

ஆயினும் தொழிநுட்ப கட்டடத்தை நிர்மாணிக்கத் தேவையானளவு காணி கிடைக்காமையினால் மாற்று திட்டத்தைப் பயன்படுத்தி தொழிநுட்ப கட்டட நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன அத்தோடு பாடசாலை வளாகத்திலிருந்த 80 x 20 சதுர அடி பரப்புடைய கட்டடம் தகர்க்கப்பட்டு அவ்விடத்தில் புதிய 90X25 சதுர அடி பரப்புடைய கட்டடமானது கல்விப் பணிப்பாளரின் அனுமதியோடு நிர்மாணிக்கப்பட்டது.

இதன் கட்டட திறப்பு விழாவில் கலந்து கொண்டிருந்த முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலு இராதாகிருஷ்ணன் 3ஆவது மாடியை விரைவில் நிர்மாணித்துத் தருவதாக உறுதியளித்தார். ஆனால் இன்றுவரை அது ஈடேறவில்லை.

அத்துடன் மாணவர்களின் விளையாட்டு திறன்களை விருத்தி செய்து கொள்வதற்கு தேவையான விளையாட்டு மைதான வசதி கூட இல்லாத நிலையில் பாரதி மகா வித்தியாலயம் கடந்த பல வருடங்களாகவே இயங்கி வருகின்றது.

இவ்வாறான நிலையில் கடந்த வாரம் குறித்த பாடசாலையின் பழைய கட்டடம் அமைந்துள்ள பிரதேசத்தில் காணி பிரச்சினை ஒன்று தலவாக்கலை தோட்ட நிர்வாகத்திற்கும் பாடசாலைக்கும் ஏற்பட்டது. பழைய கட்டிடத்தை விடுதிகளாக அமைத்துக்கொண்டு வசித்துவரும் பாடசாலை ஆசிரியர்களின் குடும்பங்களைச் சேர்ந்த ஒருவர் தமது வீட்டு தேவைக்காக குறித்த பிரதேசத்தில் பாடசாலைக்கு சொந்தமான காணியில் வீட்டுத்தோட்டம் ஒன்றினை கடந்த நான்கு வருடங்களாக செய்து வருகின்றார்.

தற்போதைய ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ஷவின் பொதுவான வேண்டுகோளுக்கமைய வீட்டுத் தோட்டம் ஒன்றினை செய்து அதன் ஊடாக தமது குடும்பத்திற்கு தேவையான மரக்கறி வகைகளை பெற்றுக்கொள்வதாக அந்த ஆசிரியை தெரிவித்தார். இருந்தபோதிலும் மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்திற்கு சொந்தமான தலவாக்கலை தோட்ட நிர்வாகம் குறித்த காணியில் எவ்விதமான பயிர் செய்கையும் செய்யக் கூடாது என்றும் அவ்வாறு செய்யும் பட்சத்தில் பலாத்காரமாக அவை பிடுங்கப்படும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு எதிராக தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்தது. குறித்த காணிப் பிரச்சினையானது கடந்த மூன்று வருடங்களாகவே நடைபெற்று வருவதால், இவ்விடயம் தொடர்பில் நுவரெலியா மக்கள் பிரதிநிதிகளிடம் பாடசாலை அபிவிருத்தி சங்கம் மற்றும் பழைய மாணவர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஆனாலும் இன்றுவரை குறித்த பிரச்சினை தீர்வின்றி இழுபறி நிலையிலேயே இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் காணப்படும் பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் செயற்றிட்டங்களை துரிதப்படுத்த வேண்டும் என்றும் பல பாடசாலைகளில் நிலவும் காணி, கட்டிடம், தளபாடங்கள், பெளதீக வளங்கள் மற்றும் ஆளணி பற்றாக்குறைகளை தீர்ப்பதற்கு முதற்கட்டமாக நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும். நுவரெலியா கண்டி மாத்தளை ஆகிய மாவட்டங்களையும் மலையகத்தின் ஊவா சப்ரகமுவ மாகாணங்களில் உள்ள மாவட்டங்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உரிய நடவடிக்கைகளை வினைத்திறன் மிக்க செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியது அவசியம்.

அத்தோடு மலையகத்தில் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை கடந்த பல வருடங்களாக விடுக்கப்பட்டு வரும் நிலையில் பல்கலைக்கழகங்களுக்கு செல்வதற்கு மாணவர்களை உருவாக்கும் பாடசாலைகளில் அடிப்படைத் தேவைகளையும் பிரச்சனைகளையும் இனங்கண்டு அரசியல் பேதமின்றி சகல பாடசாலைகளையும் அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டங்களை தமிழ்பேசும் மக்கள் பிரதிநிதிகள் ஒற்றுமையாக முன்னெடுக்க வேண்டும். மலையக கல்வி சமூகத்தின் இவ் வேண்டுகோள் நிறைவேற்றப்பட வேண்டும்.

லிந்துலை டி. சுரேன் …

தினகரன்