‘கர்ணனும் மலையகமும்’

0

ஒடுக்கப்பட்ட – அடக்கப்பட்ட ஓர் சமூகத்துக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட அநீதிகளால், கொடுமை தாங்காது, பொங்கியெழுந்து – நீதிக்காகவும், உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும் ஓர் கிராமமே ஓரணியில் திரண்டு போராடுகின்றது. இதனால் ஏற்பட்ட இழப்புகள் ஏராளம். இறுதியில் மக்களைக்காக்க – உரிமைகளை வெல்ல வாளேந்தி சமராடுகிறார் நாயகன். இதனை அடிப்படையாகக்கொண்டே ‘கர்ணன்’ படத்தின் கதையோட்டம் நகர்கின்றது.

90 காலப்பகுதியில் சாதி வெறியால் இரு கிராமங்களுக்கிடையில் கலவரம் ஏற்பட்டுள்ளது. அவ்வாறு இடம்பெற்ற உண்மை சம்பவமொன்றை அடிப்படையாக வைத்து, இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் ஏற்றத்தாழ்வுகள் அவசியமில்லை, அனைவருக்கும் சம உரிமை வேண்டும் என்பதை ‘கர்ணன்’ ஊடாக வலியுறுத்தியுள்ளார் இயக்குநர் மாரி செல்வராஜ். ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் ஊடாகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான விடுதலை விதைகளை இவர் விதைத்திருந்தார்.

‘கர்ணன்’ படத்தை நானும் நேற்று பார்த்தேன். ‘பஸ்ஸை உடைத்ததால் அவர்கள் அடிக்கவில்லை. நாம் நிமிர்ந்து பார்த்ததால்தான் அடித்தார்கள். நான் தலைநிமிர்ந்து விட்டேன். இனி குனியமுடியாது.” – என பேச்சுவழக்கில் கடுந்தொனியில் கர்ணன் கர்ஜிப்பது இன்னும் என்னுள் ஒலித்துக்கொண்டிருக்கின்றது. ” இப்படி புலு பூச்சி மாதிரி இன்னும் எத்தனை காலம்தான் வாழ்வீங்க” என ஆவேசம் பொங்க கர்ணன் எழுப்பும் கேள்வி குறித்த காட்சியும் மனத்திரையில் ஓடிக்கொண்டிருக்கின்றது.

படத்தை பார்க்கையில் நமது மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஆரம்பகால வாழ்க்கையும் கண் முன்னால் வந்து சென்றது. சாதிய கொடுமை இல்லாவிட்டாலும் அதிகார வர்க்கத்தால் அடக்கி ஆளப்படும் அவலம் நீடித்தது. தோட்டத்தில் காது குத்து, மொட்டை அடிப்பதாக இருந்தால்கூட அனுமதியை பெறவேண்டியிருந்தது. துரை முன் கைகட்டி நிற்பது, ஆமாம் சாமிபோடுவது , பணிவிடை செய்வதென அடிமை பட்டியல் தொடர்ந்தது.

இந்நிலைமை இன்னும் முழுமையாக மாறவில்லை. அதுமட்டுமல்ல பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வைத்தியசாலை உட்பட சில அரச திணைக்களங்களுக்கு சேவைகளைப் பெறுவதற்கு சென்றாலும் தரக்குறைவாக நடத்தப்படும் சம்பவங்களும் ஆங்காங்கே இடம்பெறத்தான் செய்கின்றது.

தலைகுனிந்திருந்த எம் சமூகம் என்றோ தலைநிமிர ஆரம்பித்துவிட்டது. எமக்காக பல கர்ணன்கள் போராடியுள்ளனர். இதனால்தான் இன்று உரிமைகள் பற்றி எம் சமூகம் கதைக்க ஆரம்பித்துள்ளது. எனவே, அச்சத்தால் தலைகுனிந்து வாழும் சிலரும் தலைநிமிர்ந்தால் – எமது மக்கள் தலைகுனிந்தே வாழ வேண்டும் என எம்மில் இருந்துகொண்டே நினைக்கும் தலைமைகள் அந்த நினைப்பை மாற்றிக்கொண்டால் சமூக விடுதலை சாத்தியம்.

கர்ணன் வாளேந்தினான். இரத்தம் சிந்தினான். இழப்புகள் ஏற்பட்டன. 10 ஆண்டுகள் சிறைவாசம்கூட அனுபவித்தான். இன்றைய நவீன உலகில் வன்முறை என்பது எதற்கும் தீர்வாகாது. தம் பக்கம் நீதி இருந்தாலும் வன்முறையைக் கையாண்டதால் அது பாதகமாகவே அமைந்துவிடும். எனவே, முடிந்தளவு அறவழி – அகிம்சை வழி நடைமுறைகளைப் பின்பற்றி சமராடுவோம். வாளைவிட நம் குரல் வலிமையானது.
சமூக ஊடங்கள் எமக்கான சாட்சியாக இருக்கின்றது.

அதேபோல நீதிக்காக – எமது உரிமைக்காக – சமூக விடுதலைக்காக போராடியவர்களை கர்ணனாக கொண்டுவதற்கு எம்மக்கள் பின்நின்றதில்லை. அதற்காக பல வலிகளையும் தாங்கிக்கொண்டனர். சிலர் இன்னும் வலிகளை சுமக்கின்றனர். ஆக அறவழியில் மாற்றத்துக்கான விதைகளை விதைப்போம்.

ஆக்கம் – ஆர்.சனத்