தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள அதிகரிப்பு பெற்றுக்கொள்வதில் ஏற்பட்ட நீண்டநாள் இழுபறிக்கு கடந்த காலங்களில் ஏற்பட்ட திரைமறைவு துரோகங்களே காரணமாகும். என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.
மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமான் அவர்கள் 1000 ரூபா சம்பள உயர்வு கோரிக்கையை முன்வைத்து பல்வேறு போராட்டங்களை நடத்திய போது அதற்குத் துணை நிற்க வேண்டிய தொழிற்சங்கங்களை திரை மறைவு துரோகங்களை மேற்கொண்டதாளேயே இவ்வளவு காலம் இழுத்தடிப்பு நடைபெற்றது.

ஆயிரம் ரூபா கிடைக்காது என்றும், அது கிடைத்துவிட்டால் தனது பதவியை ராஜினாமா செய்வேன் என்றும் கூறிய முன்னாள் அமைச்சர் திகாம்பரம் இன்று ஆயிரம் ரூபாவுக்கு பின்னால் துரோகங்கள் நடைபெறுகிறது என்று கூறுவது வேடிக்கையான விடயமாகும். ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் கிடைக்காது என எண்ணி அதை அதை வைத்து அரசியல் செய்யலாம் என்று நினைத்தவர்கள் இன்று அது கிடைத்தவுடன் பேசுவதற்கு வேறு விடயங்களை தேடிக் கொண்டிருப்பது தெளிவாக தெரிகிறது .தோட்டக் கம்பனிகள் தொழிலாளர்களின் வேலைப்பளுவை அதிகரித்தால் அதற்கு எதிராக முழுமையாக போராடுவதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தயாராகவே இருக்கிறது.
எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் எமது தொழிலாளர்கள் மீது சுமையை சுமத்துவதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அனுமதிக்கப் போவதும் கிடையாது. தோட்டக் கம்பனிகளின் அராஜகத்துக்கு எதிராக ஒவ்வொரு தொழிற்சங்கமும் தமது அங்கத்தவர்களுக்காக தொழிற்சங்க கடமையை செய்ய வேண்டுமே தவிர 1000 ரூபா சம்பள பெற்றுக் கொடுத்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மீது விரல் நீட்டுவது எவ்வளவு பொருத்தமான செயல் என்பதை தங்களுக்குள் தாங்களே கேள்வி கேட்டுக் கொள்ள வேண்டும்.
கடந்த அரசாங்க காலத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வேண்டுமென்று முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள், அதற்கான போராட்டங்கள் என்பவற்றுக்கு அரசாங்க தரப்பிலிருந்து எவ்விதமான ஆதரவும் கிடைக்கவில்லை. சில மலையக தொழிற்சங்கங்கள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முயற்சிகளை முறியடிக்க வேண்டும் என்பதற்காகவே திரைமறைவில் பெருந்தோட்டக் கம்பனிகளுடன் கூட்டுச்சேர்ந்து செய்யப்பட்டன. இதைத்தானே துரோகம் என்று சொல்லவேண்டும்.
ஆனால் தற்போதைய அரசாங்கம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கோரிக்கையை ஏற்று 1000 ரூபா சம்பளத்தை வழங்குவதற்கு துணை நின்று செய்யப்பட்டிருக்கிறது.
இன்று கூட்டு ஒப்பந்தத்தை காரணம்காட்டி தொழிலாளர்களை துன்புறுத்துவதற்கு தோட்டக் கம்பனிகள் முயற்சிக்கின்றன. இந்த நிலையிலாவது சம்பள அதிகரிப்பை பெற்றுக்கொடுத்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் மீது வசைபாடி கொண்டிருக்காமல் கம்பெனிக்காரர்கள் அடாவடித்தனத்தை எதிராக அணிதிரளுமாறு தொழிலாளர் சார்பாக செயற்படுகின்ற அனைத்து தரப்பினரிடம் வேண்டுகோள் விடுக்கிறோம். எனவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.