Banner After Header

ஜோசப் ஆண்டகையின் மறைவு தமிழ் சமூகத்திற்கு பாரிய இழப்பு!

இ.தொ.கா உபத் தலைவர் செந்தில் தொண்டமான் இரங்கல்

0

மன்னார் மறை மாவட்ட முன்னாள் ஆயர் வணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசப் ஆண்டகை மறைவுக்கு இலங்கைத் தொழிலளர் காங்கிரஸின் உபத் தலைவரும், பெருந்தோட்ட பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மன்னார் மறை மாவட்ட முன்னாள் ஆயர் வணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசப் யாழ்ப்பாண மாவட்டத்தில் நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.

Banner After Header

1967இல் குருவானவராக தனது பணியை ஆரம்பித்தவர். 1971 இல் முருங்கன் உதவி பாதிரியாராக (pastor) ஆனார். 1984ஆம் ஆண்டில் ரோமில் உள்ள பரப்புரைக் கல்லூரியில் திருமறைச் சட்டத்தில் முனைவர் பட்டமும் பெற்றார்.

1992 ஜூலையில் மன்னார் கத்தோலிக்க மறைமாவட்டத்தின் ஆயராக நியமிக்கப்பட்டு, 1992 அக்டோபரில் திருநிலைப்படுத்தப்பட்டார். 2015 நடுப்பகுதியில் சுகவீனமுற்ற இராயப்பு தனது ஆயர் பதவியைத் துறந்தார். மன்னார் மறைமாவட்டத்திற்கு புதிய ஆயர் நியமிக்கப்படும் வரை திருகோணமலை மறைமாவட்டத்தின் இளைப்பாறிய ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை மன்னார் மறைமாவட்டத்தின் அப்போதைய பரிபாலகராக திருத்தந்தையால் நியமிக்கப்பட்டார்.

இவரின் பல்வேறுப்பட்ட சேவைக்காக கம்பன் புகழ் விருது 2015 கொழும்புக் கம்பன் கழகம் வழங்கியது. வணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசப் சுகவீனமுற்ற நிலையில் 2021 ஏப்ரல் 1ம் திகதி காலையில் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தனது 80வது அகவையில் காலமானார்.

அவர் மக்களுக்காக எண்ணில் அடங்காத பல சேவைகளை செய்துள்ளார். அவர் செய்த சேவைகள் , அவருடைய போதனைகள், அவர் செய்த நற்பணிகளை கிருஸ்தவ ஊழியர்கள் மற்றும் மக்கள் தொடர்ந்தும் பின்பற்ற வேண்டும். அவருடைய மறைவு தமிழ் சமூகத்திற்கு பாரியதொரு இழப்பு. இந்நேரத்தில் வணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசப் ஆண்டகையின் இழப்பினால் வாடும் கிறிஸ்தவ நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அவரது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.