பண்டாரநாயக்க குடும்பத்தின் அரசியல் கோட்டை விழ்ந்த கதை!

(கட்டுரை - ஆர்.சனத்)

0

✍️கம்பஹா மாவட்டத்திலுள்ள அத்தனகல தேர்தல் தொகுதியே பண்டாரநாயக்க குடும்பத்தின் அரசியல் த(க)ளமாகவும், கோட்டையாகவும் விளங்கியது.

✍️1977 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஆறில் ஐந்து பெரும்பான்மை பலத்துடன் ஐக்கிய தேசியக்கட்சி அரியணையேறினாலும் அக்கட்சியால் அத்தனகல தொகுதியை அசைக்க முடியாமல்போனது.

அந்தளவுக்கு அத்தனகல தொகுதியில் பண்டாரநாயக்கவால் உருவாக்கப்பட்ட ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆழமாக வேரூண்டியிருந்தது.

இதனால் அத்தனகல தொகுதியை வீழ்த்துவதற்கு ஐக்கிய தேசியக்கட்சி பல வியூகங்களை வகுத்திருந்தாலும் அவை வெற்றியளிக்கவில்லை என்றே அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதுவரையில் இலங்கையில் நடைபெற்றுள்ள பாராளுமன்ற மற்றும் ஜனாதிபதி தேர்தல்களில் அத்தனகல தொகுதியில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஆதிக்கம் – செல்வாக்கு எவ்வாறு இருந்தது என்பதை வாக்கு விகிதத்தின் அடிப்படையில் எடுத்துரைப்பதே இப்பதிவின் முதன்மை நோக்கமாகும்.

பண்டாரநாயக்கவும் முதலாவது தேர்தலும்

✍️ஐக்கிய தேசியக் கட்சி ஊடாக செயற்பாட்டு அரசியலில் இறங்கிய எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க, 1947 இல் நடைபெற்ற முதலாவது பாராளுமன்றத் தேர்தலில் அத்தனகல தொகுதியில் களமிறங்கினார்.

✍️பதிவுசெய்யப்பட்ட மொத்த வாக்காளர்களில் (55,948) 36 ஆயிரத்து 487 பேர் வாக்களிப்பில் பங்கேற்றனர்.417 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன. இறுதியில் 31 ஆயிரத்து 463 வாக்குகளைப்பெற்று அமோக வெற்றிபெற்றார் பண்டாரநாயக்க.

✍️காலப்போக்கில் – ஐக்கிய தேசியக்கட்சியுடன் கொள்கைரீதியில் முரண்பாடுகள் ஏற்பட 1951 இல் ஐ.தே.கவில் இருந்து வெளியேறி 1951 செப்டம்பர் 2 ஆம் திகதி ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை உருவாக்கினார் பண்டாரநாயக்க.

✍️1952 மேயில் நடைபெற்ற இலங்கையின் 2 ஆவது பாராளுமன்றத் தேர்தலில் பண்டாரநாயக்க தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி போட்டியிட்டது.

தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி வெற்றிபெற்றாலும் அத்தனகல தொகுதியில் 38 ஆயிரத்து 478 வாக்குகளைப்பெற்று பண்டாரநாயக்கவே முதலிடம் பெற்றார்.

அத்துடன், மொத்தமாக 9 தொகுதிகளில் சுதந்திரக்கட்சி வெற்றிபெற்றது. பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்த்தும் அக்கட்சிக்கு கிடைத்தது.

சுதந்திரக்கட்சியின் எழுச்சி

✍️ 1956 இல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வெற்றிபெற்றது. பண்டாரநாயக்க பிரதமரானார். அத்தனகல தொகுதியில் 45 ஆயிரத்து 16 வாக்குகளைப் பெற்றார்.

( செல்லுபடியான வாக்குகளில் 96%).
ஐக்கிய தேசியக்கட்சியின் வேட்பாளர் செனவிரத்ன 3ஆயிரத்து 19 வாக்குகளையே பெற்றார்.

✍️1959 செப்டம்பர் 29 ஆம் திகதி பண்டாரநாயக்க சுட்டுக்கொல்லப்பட்டார். இதனையடுத்து நடத்தப்பட்ட இடைத்தேர்தலிலும் சுதந்திரக்கட்சியே அத்தனகல தொகுதியில் வெற்றிபெற்றது.

✍️1960 இல் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் அத்தனகல தொகுதியில் சுதந்திரக்கட்சி சார்பில் போட்டியிட்ட ஒபேசேகர என்பவர் 22 ஆயிரத்து 491 வாக்குகளைப்பெற்று தொகுதியில் முதலிடம் பெற்றார்.

✍️இத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி 52 தொகுதிகளில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. 46 தொகுதிகளில் சுதந்திரக்கட்சி ஆதிக்கம் செலுத்தியது.

✍️பண்டாரநாயக்கவின் படுகொலையின் பின்னர் இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்ட சி.பி.டி சில்வாவிடமிருந்து தலைமைப்பதவி பண்டாரநாயக்கவின் பாரியாரான ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கவுக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில் 1965 மார்ச் 22 ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொண்டாலும் அத்தனகல தொகுதியில் போட்டியிட்ட ஶ்ரீமாவோ பண்டாரநாயக்க, 26 ஆயிரத்து 150 வாக்குகளைப் பெற்று தொகுதியில் வெற்றியை தக்கவைத்துக்கொண்டார்.

1970 மார்ச் 17 ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எழுச்சி பெற்றது.

ஶ்ரீமாவோ பண்டாரநாயக்க தலைமையில் 91 தொகுதிகளில் வெற்றிபெற்று அக்கட்சி ஆட்சிபீடமேறியது. வழமைபோல் அத்தனகல தொகுதியில் வெற்றியை உறுதிப்படுத்தினார் ஶ்ரீமா. 31,612 வாக்குகள்.

1977 இல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஜே.ஆர். ஜயவர்தன தலைமையில் வரலாற்று வெற்றியை பதிவுசெய்த தேசியக்கட்சி.

ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது. எனினும், அத்தனகல தொகுதியில் 59.05 சதவீத வாக்குகளுடன் ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கவே முதலிடம் பிடித்தார்.

(இலங்கையில் தொகுதிவாரியாக நடத்தப்பட்ட இறுதி தேர்தல் இதுவாக அமைந்தது. ஜே.ஆரால் விகிதாசார முறை அறிமுகப்படுத்தப்பட்டது.)

ஜனாதிபதி தேர்தலும் அத்தனகல தொகுதியும்

1982 ஒக்டோபர் 20 இல் நடைபெற்ற இலங்கையின் முதலாவது ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி வெற்றிபெற்றிருந்தாலும் – கம்பஹா மாவட்டத்தில் அதிக வாக்குகளைப் பெற்றிருந்தாலும் அத்தனகல தொகுதியில் சுதந்திரக்கட்சி வேட்பாளரான கொப்பேகடுவவுக்கே 31 ஆயிரத்து 495 வாக்குகள் அளிக்கப்பட்டன.

ஜே.ஆர். ஜயவர்தனவுக்கு 40 சதவீத வாக்குகளையே அத்தொகுதியில் பெறமுடிந்தது.

ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றதும், சர்வஜன வாக்கெடுப்பை நடத்தி நாடாளுமன்றத் தேர்தலை நடத்தாமலேயே ஆட்சியை தக்கவைத்துக்கொண்டார் ஜே.ஆர்.

இதனால் 1977 இற்கு பின்னர் 1989 இல்தான் அடுத்த பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது.
1988 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலிலும் ஐக்கிய தேசியக்கட்சியே வெற்றிபெற்றாலும் அத்தனகல தொகுதியில் ஶ்ரீமாவோ பண்டாரநாயக்க 35 ஆயிரத்து 758 வாக்குகளைப்பெற்று தொகுதியில் முன்னிலை வகித்தார். ரணசிங்க பிரேமதாசவுக்கு 37.40 சதவீத வாக்குகளே கிடைத்தன.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் இலங்கையில் மாகாணசபை முறைமை 1988இல் அறிமுகப்படுத்தப்பட்டது.

மாகாணசபைத் தேர்தலிலும் அத்தனகல தொகுதி சுதந்திரக்கட்சியின் கட்டுப்பாட்டின்கீழ்தான் இருந்தது.

1999 இல் நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலில் 59.50 வாக்குகளை சுதந்திரக்கட்சி தலைமையிலான மக்கள் கூட்டணி அத்தனகல தொகுதியில் பெற்றது. ஐக்கிய தேசியக்கட்சிக்கு 28.74 வீத வாக்குகளே கிடைத்தன.

உள்ளாட்சிசபைத்தேர்தலிலும் அத்தனகல தொகுதியில் சுதந்திரக்கட்சியே வெற்றிநடைபோட்டது.

1994 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் 28 ஆயிரத்து 576 வாக்குகளையும், அதே ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் 51 ஆயிரத்து 923 வாக்குகளையும் பெற்று அத்தனகல தொகுதியில் சுதந்திரக்கட்சி வெற்றிபெற்றது.

ஐக்கிய தேசியக்கட்சியின் 17 ஆண்டுகால ஆட்சிக்கு பண்டாரநாயக்கவின் மகளான சந்திரிக்கா தலைமையில் மக்கள் கூட்டணி முடிவு கட்டியது.

1999 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மேற்படி தொகுதியில் சந்திரிக்கா 51 ஆயிரத்து 204 வாக்குகளைப் பெற்றார்.ஐக்கிய தேசியக்கட்சியின் வேட்பாளரான ரணில் விக்கிரமசிங்கவுக்கு அத்தனகல தொகுதியில் 21,709 வாக்குகளே வழங்கப்பட்டன.

2000, 2001 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலிலும் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையிலான மக்கள் கூட்டணியே அத்தனகல தொகுதியில் கோலோச்சியது.

2000 – 54.81% வாக்குகள்.
2001- 49.53% வாக்குகள்.

அதன்பின்னர் 2004 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் மக்கள் கூட்டணிக்கு 45 ஆயிரத்து 529 வாக்குகளும், ஐக்கிய தேசியக்கட்சி 24, ஆயிரத்து 282 வாக்குகளும் அத்தனகல தொகுதியில் கிடைத்தன. இதன்படி மக்கள் கூட்டணிலே முன்னிலை வகித்தது.

2004 இல் நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் இத்தொகுதியில் மக்கள் கூட்டணி 65.54 வீத வாக்குகளைப்பெற்று முதலிடம் வகித்தது. ஐக்கிய தேசியக்கட்சிக்கு 23.54 வீத வாக்குகளே கிடைத்தன.

ராஜபக்சக்களின் எழுச்சி

2005 இல்தான் பண்டாரநாயக்கவின் குடும்ப ஆட்சி முடிவுக்கு வந்தது எனலாம். 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் பிரகாரம் நபரொருவர் இரண்டு தடவைகளே ஜனாதிபதி பதவியை வகிக்கலாம் என்பதால், மக்கள் கூட்டணி அரசில் பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கினார்.

பண்டாரநாயக்கவின் அரசியல் கோட்டையில் மஹிந்த ராஜபக்சவுக்கு 60.52 வீத வாக்குகள் கிடைத்தன. ஐக்கிய தேசியக்கட்சிக்கு 38.32 வீத வாக்குகளையே பெறமுடிந்தது.

இத்தேர்தலில் மஹிந்த ராஜபக்ச வெற்றிபெற்றதும் சுதந்திரக்கட்சியின் தலைமைப்பதவியும் அவர் அவசமானது. காலப்போக்கில் சந்திரிக்காவை ஓரங்கட்ட மஹிந்த நடவடிக்கை எடுத்தார்.

பண்டாரநாயக்க நாமத்தை மறைத்து ராஜபக்சக்களை முன்னிலைப்படுத்துவதற்கு மஹிந்த ராஜபக்ச முற்பட்டார் என 2015 ஆம் ஆண்டில் பொதுவேட்பாளராக களமிறங்கிய மைத்திரிபால சிறிசேன குற்றஞ்சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

2006 இல் நடைபெற்ற உள்ளாட்சி சபைத் தேர்தலில் 34 ஆயிரத்து 245 வாக்குகளுடன் அத்தனகல பிரதேச சபையை மஹிந்தவின் தலைமையின்கீழ் சுதந்திரக்கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கைப்பற்றியது.

2009 இல் நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் அத்தனகல தொகுதியில் 72.94 வாக்குகளை மஹிந்தவின் தலைமையின்கீழ் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெற்றது.

2010 இல் நடைபெற்ற ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தல்களிலும் அத்தனகல தொகுதியில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியே வெற்றிபெற்றது.

சந்திரிக்கா அம்மையார் ஓரங்கட்டப்பட்டாலும் பண்டாரநாயக்கவால் உருவாக்கப்பட்ட கட்சி உயிர் வாழ்ந்தது. சந்திரிக்கா அம்மையாருடன் மஹிந்த முரண்பட்டாலும் கட்சியை வெற்றிபாதையை நோக்கி அழைத்து செல்வதில் குறியாக இருந்தார்.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே 2014 நவம்பர் 21 ஆம் திகதி ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளராக செயற்பட்ட மைத்திரிபால சிறிசேன மஹிந்த அரசியிலிருந்து வெளியேறினார்.

மேலும் பல அமைச்சர்களுடன் மைத்திரியுடன் வந்தனர். சந்திரிக்கா அம்மையாரே இதற்கான காய்நகர்த்தல்களை மேற்கொண்டிருந்தார்.

சுதந்திரக்கட்சி தலைமைப்பதவி மஹிந்த வசமே இருந்தது. 2015 ஜனவரி 8 இல் நடைபெற்ற தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தோல்வியடைந்திருந்தாலும் அத்தனகல தொகுதியில் அவருக்கு 54 ஆயிரத்து 777 வாக்குகள் அளிக்கப்பட்டன. மைத்திரிபால சிறிசேனவுக்கு 50 ஆயிரத்து 380 வாக்குகள் வழங்கப்பட்டன.

அதே ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் அத்தனகல தொகுதியில் 47.29% வாக்குகளை மஹிந்த அணி பெற்றிருந்தாலும் 44.60% வாக்குகளைப்பெற்று ஐக்கிய தேசியக்கட்சியும் தனது செல்வாக்கை அதிகரித்துக்கொண்டது.

ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் சுதந்திரக்கட்சியின் தலைமைப் பதவியையும் மைத்திரி கைப்பற்றினார்.

இதனால் கடுப்பான ராஜபக்சக்கள், பஸிலின் தீவிர முயற்சியால் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற கட்சியை உருவாக்கினர். ராஜபக்சக்களுக்கான கட்சியாகவே இது பார்க்கப்பட்டது. அத்தனகல என்ற நிலைமாறி மெதமுலன ( ராஜபக்சக்களின் சொந்த ஊர்) என்ற விம்பத்தை உருவாக்குவதே புதிய கட்சியின் நோக்கமாகவும் பார்க்கப்பட்டது.

2018 பெப்ரவரி 10 ஆம் திகதி நடைபெற்ற உள்ளாட்சிசபைத் தேர்தலில் மொட்டு கட்சி தனித்து களமிறங்கியது. அத்தனகல பிரதேச சபைக்கான தேர்தலில் 45.91% வாக்குகளைப்பெற்று ஆட்சியைப்பிடித்தது.

சுதந்திரக்கட்சிக்கு 12.22% வாக்குகளே கிடைத்தன. ஐக்கிய தேசியக்கட்சிக் 24.73% வாக்குகள் கிடைத்தன. இதற்கமைய இலங்கை அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அத்தனகல தொகுதியில் மூன்றாம் நிலைக்கு தள்ளப்பட்டது.

உள்ளாட்சிசபைத் தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாகவே 34 ஆண்டுகளுக்கு பின்னர் ஜனாதிபதி தேர்தலில்கூட போட்டியிடாமால் சுதந்திரக்கட்சி இன்று நழுவியுள்ளது.

2021 மார்ச் 1 இணைப்பு….

2020 நடந்து முடிந்த பொதுத்தேர்தலிலும் அத்தன கல தொகுதியில் மொட்டு கட்சி வெற்றிபெற்றது.