Banner After Header

வடக்கு,கிழக்கில் பொது வாக்கெடுப்பை நடத்துங்கள்!

0

முல்லைத்தீவு குறுந்தூர் மலையில் தமிழர்களின் பூர்வீக நிலத்தை அபகரிக்கும் நோக்கிலேயே அங்கு இராணுவக் கொடியும் புத்த பகவானின் சிலையும் நாட்டப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசேட வியாபாரப் பண்டங்கள் அறவீட்டுச் சட்டத்தின் கீழான தீர்மானங்கள் குறித்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

Banner After Header

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

முல்லைத்தீவு குறுந்தூர் மலையில் தமிழர்களின் பூர்வ மண்ணில் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தலைமையில் இராணுவத்தினர் தலைமயில் இராணுவக் கொடிகள் நாட்டப்பட்ள்ளதுடன் புத்தப் பெருமானின் சிலையொன்றும் வைத்துள்ளனர். அகழ்வாராய்ச்சி என்ற பேரில் அங்குள்ள தமிழர்களின் முழு நிலத்தையும் அபகரிப்பும் முயற்சியொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இங்கு உள்ளவை தமிழ் கிராமங்களாகும். தமிழர்கள் இங்கு பூர்வீகமாக வாழ்ந்துள்ளனர். இன்று அந்த இடங்கள் அழிந்துப்போயுள்ளன. அந்த இடங்களில் இருந்த மக்களும் இடம்பெயந்துள்ளனர். கல்யாணிப்புரம், படலைக்கல்லு என்ற இரண்டு ஆதிக்கிராமங்கள் அங்கு இருந்துள்ளதுடன், அவை தமிழர்களின் பூர்வீக நிலமாகும். இப்போதும் அங்கு சோக்காளை சுடலைக்கல் உள்ளது. சோமக்காளையில் இருக்கும் சிலுவைகளில் மலர்வு, உதிர்வு எழுதப்பட்ட தமிழ் மொழி வடிவங்கள் இன்றும் காணப்படுகின்றன.

அந்த இடத்தில் அகழ்வாராய்ச்சி செய்யக்கூடாதென முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவும் உள்ளது. நீதிமன்ற கட்டளைமீறி ஓர் அமைச்சர் அங்கு சென்று ஆரவாரங்களுடனும் படைப்பட்டாளத்துடனும் இவ்வாறு நடந்துக்கொள்வதன் மூலம் நீதித்துறை இருக்கின்றதா எனக் கேட்கின்றோம். ரஞ்சன் ராமநாயக்கவுக்கு இந்த நாடு நீதியை வழங்கியுள்ளதாக பலரும் கூறுகின்றனர். அவ்வாறெனின் சிங்கள மக்களுக்கு ஒரு நீதியும் தமிழ் மக்களுக்கு ஒரு நீதியுமா உள்ளதென கேட்கின்றோம்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜை கொலைசெய்தவர் விடுதலைச்செய்யப்பட்டுள்ளார். மிருசுவில் படுகொலையில் ஈடுபட்டவரும் விடுதலைச் செய்யப்பட்டுள்ளார். ஆனால், தமிழ் அரசியல் கைதிகள் இன்னமும் விடுதலைச் செய்யப்படாமல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நீதிமன்றங்களும் நீதித்துறையும் தமிழர்கள் விடயத்தில் எங்கே போயின. இந்த நாட்டின் நீதிமன்றங்கள் பௌத்த சிங்களவர்களுக்கு மாத்திரம் நீதி சொல்லும் நீதிமன்றங்களாகவே உள்ளன.

குறுந்தூர் மலையில் அகழ்வாராய்ச்சிதான் நடைபெற வேண்டுமென்றால் அதற்காக செல்பவர்கள் ஏன் செங்கல் கல்லை கொண்டுசெல்ல வேண்டும்?. ஏன் இராணுவப் படைசூழச் செல்ல வேண்டும்?. படையணிகளின் கொடிகள் ஏன் நாட்டப்பட வேண்டும்? ஏன் புத்த பகவானின் சிலை நாட்டப்பட வேண்டும்?. 1956ஆம் ஆண்டு சிங்கள வன்முறையின் ஊடாக பலாத்காரமாக அநுராதபுரத்தில் இருந்த 25ஆயிரத்திற்கும் அதிகமான தமிழ் குடும்பங்கள் அனுப்பப்பட்டார்கள். இப்போதும் அநுராதபுரத்தில் ஒரு சிவன் ஆயலம் உள்ளது. தமிழர்களின் காணிகள் உள்ளன. அவர்களை மீள குடியேற்ற இந்த அரசாங்கம் எடுக்கப்போகும் நடவடிக்கையென்ன?. நாம் வாழும் இடங்களில் எம்மை நிம்மதியாக வாழவிடாது வாழும் இடங்களையும் அபகரிக்க முற்படுவதுடன், தமிழர்களின் பூர்வீக நிலங்களையும் அழிக்க முற்படவும் சிந்திக்கின்றனர். பொலனறுவையில் ஆதிக்காலத்தில் தமிழர்கள் வாழ்ந்தனர். அங்கும் ஓர் சிவன் ஆலயம் உள்ளது. அதனை கட்டுவதற்கு ஏன் அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவில்லை?. இலங்கையில் ஐந்து பஞ்ச ஈச்சரங்கள் இருந்தன. காலியில் இருந்த தொண்டஈச்சவரம் எங்கே?. அது அடியோடு அழிந்துப்போயுள்ளது.

இலங்கைக்கு சிங்கள மக்கள் வருவதற்கு முன்னர் இயக்கர்கள், நாகர்களாக பஞ்ச ஈச்சரங்களுடன் தமிழர்கள் இங்கு வாழ்ந்துள்ளனர் என்பதற்கு இவைதான் சான்று. தமிழர்கள் தமிழ் பௌர்த்தர்களாக இருந்தனர். நயினாதீவிலும், காங்கேஸசன் துறையிலும் அடையாளங்கள் இருக்கின்றனர். அங்கு சிங்களவர்கள் இருக்கவில்லை. ஜப்பானிலும், சீனாவிலும் உள்ள பௌத்தம் சிங்கள பௌத்தமா?. தமிழர்கள் பௌத்தர்களாக இருந்துள்ளனர்.

ஆகவே, முல்லைத்தீவில் நடைபெற்றுள்ள சம்பவம் வெளிப்படையான இன அழிப்பாகும். தமிழர்களும் சிங்களவர்களும் இந்த நாட்டில் இணைந்து வாழ முடியாது. இங்கு பொதுவாக்கெடுப்பொன்று நடத்தப்பட வேண்டுமென உலக நாடுகளிடம் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.